செய்திப்பிரிவு தலைவராக
25+ வயதுகளிலேயே இதழியலிலும் எழுத்தியலிலும் வெற்றிக்கொடி கட்டிய கிராமத்து இளைஞர் இவர். எழுத்தோடும், இலக்கியங்களோடும் எந்த தொடர்பும் இல்லாத நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் பிறந்தவர். 11 வயதிலேயே சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கிய கோமல் அன்பரசன், பள்ளிக்கூட பருவத்திலே த.மு.எ.ச. போன்ற இயக்கங்களின் நடவடிக்கைகளிலும் மாணவர் அமைப்புகளிலும். இதழ்களிலும் தம் பங்கெடுப்பை தொடங்கியவர்.
பள்ளிக்காலத்தில் "கவின்" என்ற கையெழுத்து இதழை நடத்தியதோடு, கல்லூரியில் "இளந்தூது" என்ற மாணவர் இதழுக்கு ஆசிரியராக இருந்தவர்.
கல்லூரியில் படிக்கும் போதே இவர் எழுதி வெளியிட்ட "சூரியப்பார்வைகள்" என்ற உரைவீச்சு தொகுப்பு, அந்த வயதில் இலக்கியத்தின் பால் அவருக்கிருந்த ஆளுமையையும், சமூக சீர்கேடுகளின் மீதிருந்த கோபக்கனலையும் வெளிப்படுத்தின.
அதன்பின் வெளிவந்த அவரது "மாண்புறும் மக்கள்" என்ற நூல் வெளியே தெரியாத சமூகப் பணியாளர்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது.
இவரது அடுத்த படைப்பான "செய்திகள். . . நிஜமும் நிழலும்" என்ற நூல் இதழியல் உலகின் நடைமுரை சிக்கல்களை படம் பிடித்து காட்டி, வித்தகர்கள் பலரின் வாழ்த்துகளைப் பெற்ற அற்புதமான புத்தகம். 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் கோமல் அன்பரசன், இதுவரை எழுதிய கட்டுரைகளும் கவிதைகளும் ஏராளம். இவைதவிர, இவரது படைப்பில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பற்றிய சுவையான நூலும், ஊடகத்துறை பற்றிய சில நூல்களும் கவிதைத் தொகுப்பு ஒன்றும் அச்சேறி வருகின்றன.
இவை எல்லாவற்றையும்விட ஊடகத்துறையில் ஆரோக்கியமான சூழலுக்கு தம் பங்களிப்பை ஆற்றி வரும் கோமல் அன்பரசன் மிக, மிக இளம் வயதிலேயே மின்னணு ஊடகம் ஒன்றின் செய்திப் பிரிவுக்குத் தலைமையேற்று நடத்துபவர். ஆம்... மக்கள் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு தலைவராக இருக்கிறார்.
- ஆ. பிரேமகுமார்
தேரழந்தூர்.
மயிலாடுதுறை

